• மக்களிடம் சுற்றுப் பயணம் செய்ய தயார் ! அதிகாரத்தை கைப்பற்றிய டிடிவி தினகரன்

  Tuesday ,1 Aug 2017

  நாடாளுமன்றத் தேர்தலுக்கு(2019) கட்சியை தயார் செய்யும் நோக்கிலும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன் என்று அதிமுக அம்மா பிரிவு அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.இ.அ.தி.மு.க. சசிகலா தலைமையிலும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் இரண்டாகப் பிளவுபட்டது. சசிகலா தலைமையிலான பிரிவு அ.தி.மு.க. அம்மா பிரிவு என்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா பிரிவு என்றும் அழைக்கப்பட்டுவருகிறது.

  சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா நான்காண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்றார்.

  ஆனால், அதற்குப் பிறகு அ.தி.மு.கவின் இரு அணிகளின் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, சசிகலாவும் டிடிவி தினகரனும் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என பன்னீர்செல்வம் அணி நிபந்தனை விதித்தது. தமிழக அமைச்சர்களும் இதே கருத்தைத் தெரிவித்தனர்.

  இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், அவருடைய அதிகாரத்தை தானே செயல்படுத்தும் நிலையில் இருப்பதாக அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.