• கலங்கூட் பீச் - கோவா

  Thursday ,2 Apr 2015

  India :

  வடக்கு கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளான கேண்டலிம் மற்றும் பாகா கடற்கரைகளுக்கு மத்தியில் கலங்கூட் பீச் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. இந்தக் கடற்கரையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதி மிகவும் விசாலமானது.

  இந்த பார்க்கிங் பகுதியை ஒட்டி வரிசையாக சில கடைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த கடைகளில் ஆடைகள், காலணிகள் போன்ற பொருட்களை மலிவு விலைகளில் வாங்கலாம். அதோடு கோவா வந்ததின் நினைவாக நீங்கள் ஏதேனும் வாங்க நினைத்தால், அவற்றையும் இந்தக் கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம்.

  கலங்கூட் பீச், உலர்ந்த பழங்களுக்காகவும் அதன் வியாபாரத்துக்காகவும் கோவாவில் மிகவும் பிரசித்தம். அதிலும் இங்கு கிடைக்கும் வறுத்த முந்திரி மற்றும் உப்பு தடவிய முந்திரி பருப்புகளுக்கு கடும் கிராக்கி.

  கலங்கூட் பீச்சில் நீங்கள் தங்க விரும்பும் பட்சத்தில் இங்கு ஏராளமான ரிசார்ட்டுகள் இருக்கின்றன. இந்த ரிசார்ட்டுகளிலிருந்து பார்க்கும் போது கலங்கூட், கேண்டலிம், மற்றும் பாகா கடற்கரைகளின் பேரழகினை பரிபூரணமாக ரசிக்கலாம்.

  மேலும் கலங்கூட் பீச்சை பனாஜி உள்ளிட்ட கோவாவின் மற்ற இடங்களிலிருந்து அடைவது வெகு சுலபம். அந்த பகுதிகளிலிருந்து நீங்கள் காரில் கலங்கூட் வரும் பட்சத்தில், ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கும் அகலமான அறிவிப்புப் பலகைகள் உங்களுக்கு உதவி செய்யும்.