• வர்கா பீச் - கோவா

  Wednesday ,1 Apr 2015

  India :

  தெற்கு கோவாவில் உள்ள கோல்வா பீச் போன்ற பெரிய கடற்கரைகளுக்கு மத்தியில் சிறிய கடற்கரையாக இருந்தாலும் வர்கா பீச் அவற்றுக்கு எந்த வகையிலும் தரத்தில் குறைந்ததில்லை.

  இந்த கடற்கரையில் வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களும், சூரிய கதிர்களில் மின்னிடும் வெண் மணலும் கண்களுக்கு விருந்து படைக்கும் அற்புதக் காட்சிகள். மேலும் இந்த விருந்தோடு சேர்த்து உங்களுக்காக கோவான் உணவும், காக்டெயில்களும் வர்கா பீச்சில் காத்துக்கொண்டிருக்கின்றன.

  கோவாவின் குட்டிக் கடற்கரையான வர்கா பீச்சின் கரையோரத்தில் அமைந்திருக்கும் அழகிய சிறு கிராமமான வர்கா என்ற மீனவ கிராமத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.

  இதன் காரணமாக வர்கா கடற்கரையில் நூற்றுக்கணக்கான பாய்மரங்கள் எந்நேரமும் நின்று கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்தக் கடற்கரைக்கு அருகில் உள்ள கோல்வா பகுதிகளில் கொண்டாடப்படும் ஃபாமா என்ற ஆண்டுத் திருவிழாவின் தாக்கம் வர்கா கிராமத்திலும் பிரதிபலிக்கும்.

  அந்த சமயங்களில் வர்கா கிராமத்துக்கு பக்கத்து கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் படை எடுத்து வருவது போல் வருவார்கள். அப்போது வர்கா கிராமம் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும் இந்த சமயங்களில் வர்கா கிராமத்துக்கு வரும் பயணிகள் அருகிலுள்ள பெநொவ்லிம் கடற்கரைக்கு சிறு உலா சென்று வரலாம்.