• வெயிலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தர்பூசணி பழம்

  Friday ,10 Mar 2017

  வெயில் காலம் முழுவதாக தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னைவாசிகளை வெயில் இப்பொழுதே வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது.

  இது ஒருபுறமிருக்க , வெயில் காலத்தில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் விஷயமாகவும் , உடல்நலம் பயக்கும் விஷயமாகவும் இருப்பவை பழச்சாறுகள். சிறியவர் முதல் பெரியவர்வரை உடலை குளிர்வித்து , நாவுக்கு இனிமையாகவும் இருக்க நாடும் உணவுப்பொருள் பழங்களே. வெயில் காலத்தில் உஷ்ணம் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள இயற்கை தந்துள்ள வரம் தர்பூசணி என்றால் அது மிகையில்லை. அப்படி என்னதான் இருக்கிறது தர்பூசணியில்?

  நீர்சத்து

  தர்பூசணியில் உள்ள நீர்சத்து உடல் சூட்டை தணிக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது . அதிகப்படியான உஷ்ணத்தில் மூலம் வரும் " Heat stroke" கை தடுப்பதற்கு தர்பூசணியில் உள்ள நீர்சத்து உதவுகிறது. உடலில் உள்ள தாதுக்களின் அளவை சீராக்குவதன் மூலம் மிகவும் பயனளிக்கிறது.

  வைட்டமின்கள்

  உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் , சருமம் பொலிவுடன் இருக்கவும் முடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் வைட்டமின் ஏ உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் கண் பார்வை மேம்படவும் , ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

  100 கிராம் பழத்தில் 569 மில்லிகிராம் வைட்டமின் ஏ தர்பூசணியில் உள்ளதால் சருமத்திற்கும் கண்களுக்கும் ஏற்றதொரு பழமாக இருக்கிறது. மேலும் இதிலுள்ள லைக்கோபீன் சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதா கதிர்களிடமிருந்து நம்மை காக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள வைட்டமின் B6, வைட்டமின் B1, வைட்டமின் C உள்ளிட்டவை உடல் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகின்றன.

  புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு

  தர்பூசணியின் அடுத்த மிக முக்கிய அம்சம் Anti- Oxidants எனப்படும் வேதிப்பொருட்கள் . லைக்கோபீன் , பீட்டா கரோட்டின் ,சியாசான்தின் ,கிரிப்டோசான்தின் போன்ற வேதிப்பொருட்கள் குடல் , மார்பகம், வயிற்றுப்பகுதி, நுரையீரல் போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன. மேலும் தர்பூசணியில் உள்ள கரோடினாய்ட்ஸ் என்ற வேதிப்பொருள் உடலில் இருக்கும் திசுக்களைப் பாதுகாக்க உதவுகிறது.

  ஆண்மை சக்தி

  தர்பூசணியில் உள்ள விதைகள் ஆண்மை சக்தியை அதிகரிக்க வல்லவை என்று நம்பப்டுகிறது. இவ்விதைகளில் இருக்கும் அமினோ அமிலங்கள் ஆண்களின் இழந்த சக்தியை மீட்டுத்தரவும் நரம்பியல் மண் டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதிலுள்ள மெக்னீஷியம் , ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் இதய நோய்களிலிருந்து காக்கவும் உதவுகிறது.

  இவ்வளவு நற்குணங்கள் கொண்ட தர்பூசணியை முழு பழமாக வாங்கி உண்டால் சுகாதாரமானது. ஈ மொய்க்காமல் நல்ல முறையில் மூடிவைக்கப்பட்டிருக்கும் துண்டுகளை உண்போமாயின் இந்த வெயில் காலத்தின் கோரப்பிடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.